வகுப்பறை கட்டாததை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்

முத்தரசி குப்பத்தில் பள்ளிக்கு வகுப்பறை கட்டப்படாததை கண்டித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-20 15:37 GMT

மரத்தடியில் அமர்ந்து...

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டை அடுத்த முத்தரசி குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கட்டித் தரக்கோரி அப்பகுதி பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் எந்த பயனும் இல்லை.

போராட்டம்

எனவே நேற்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளி நுழைவு வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மேல்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த் குமார், பெருமாள், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் தயாளன். தாசில்தார் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் வரும் முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்