சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் கூறினார்

Update: 2022-06-30 14:55 GMT

பெற்றோருக்கு சிறை

தேனி மாவட்டத்தில் சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதும், விதிமீறல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதிலும், சட்டங்களை பின்பற்றுவதிலும் அலட்சியத்தை காண முடிகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது.

சிறுவர்களை வாகனங்கள் ஓட்டுவதற்கு பெற்றோர் அனுமதிப்பது தவறு. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஓட்டுனர் உரிமம் காலாவதி

ஓட்டுனர் உரிமங்கள் காலாவதியானால் 5 ஆண்டுகள் வரை அபராதத்துடன் புதுப்பிக்கும் நடைமுறை இருந்தது. தற்போது அதுவும் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் உரிமம் காலாவதியானால், 1 ஆண்டுக்குள் அபராதத்துடன் புதுப்பிக்கலாம். 1 ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்க முடியாது. புதிதாக தேர்வில் பங்கேற்று தான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.

பழைய வாகனத்தை வாங்கும் போது வாகன உரிமையாளர், வாகனத்தின் என்ஜின் எண் போன்ற விவரங்களை முறையாக சரிபார்த்து வாங்க வேண்டும். அதுபோல் வாகனத்தை விற்பனை செய்யும் போது, ஆவணங்களை பெயர் மாற்றம் செய்த பின்னர் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும். இது தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.

இளைஞர்களிடையே இருசக்கர வாகனத்தை மறுவடிவமாக்கும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இதுவும் போக்குவரத்து விதிமீறல் தான். இருசக்கர வாகனத்தின் இருபுறமும் உள்ள கண்ணாடிகளை கழட்டிவிட்டு வாகனம் ஓட்டுவதும், சைலன்சர்களை வாகனத்தின் இயல்புக்கு மாறாக மாற்றி அமைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற விதிமீறல்கள் மீதும் இனிவரும் காலங்களில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்