தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இயலாமல் பெற்றோர் ஏமாற்றம்

தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இயலாமல் பெற்றோர் ஏமாற்றம்

Update: 2023-05-24 10:46 GMT

சேவூர்,

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் குழந்தைகளை சேர்க்க இயலாமல் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒரு கிேலாமீட்டர் தொலைவுக்குள்

தனியார் பள்ளிகளில் ஏழை-எளிய பெற்றோர்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக 25 சதவீத இலவச கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அவினாசி வட்டாரத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் இச்சட்டத்தின் கீழ் தங்களது குழந்தைகளை ஆரம்ப வகுப்புகளில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வாகி அவரவர் அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியும் வந்தது.

இதைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளில் நேற்று நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில், குறுஞ்செய்தி வந்திருந்த தகுதியான குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆனால் கூட்டத்தில் பங்கேற்ற கல்வித் துறை அலுவலர் கூறுகையில், 1 கிலோ மீட்டர் தொலைவுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே தகுதியானவர்கள், எனவே குறைந்த அளவு குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படும் என்றார். இதனால் தகுதியானவர் என குறுஞ்செய்தி வந்தும் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பெற்றோர்கள் ஏமாற்றம்

இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு 3 முதல் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். தற்போது, விண்ணப்ப தேதி முடிவடைந்து, இனி அடுத்த ஆண்டு தான் விண்ணப்பிக்க இயலும் என்ற நிலையில், இப்போது இவ்வாறு கூறுகின்றனர். தங்களது விண்ணப்பம் தகுதியானது, தேர்வாகி உள்ளதாக குறுஞ்செய்தி வந்தும் குழந்தைகளை சேர்க்க இயலாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. இதை நம்பியே கடந்த ஒரு மாத காலமாக சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்டவை பெற்று, விண்ணப்பித்து காத்துக் கிடக்கிறோம். பிள்ளைகளும் பள்ளியில் சேர ஆர்வமாக இருந்தனர்.

இப்போது குழந்தைகளின் ஆரம்ப வகுப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே கல்வித்துறை, தொலைவை 3 கிலோ மீட்டராக தளர்த்தி வழங்க வேண்டும். அல்லது 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தகுதியாகி தேர்வான விண்ணப்பதாரர்களை சேர்க்க பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளவர்களுக்கு மட்டுமே சேர்க்கை என கல்வித் துறையினர் அறிவுறித்தியுள்ளனர். ஆனால் பள்ளியில் 25 சதவீதஇட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகப்படியான குழந்தைகளை சேர்க்க இடம் உள்ளது, கல்வித்துறை அறிவுறுத்தலால் குழந்தைகளை சேர்க்க இயலவில்லை. இருப்பினும் மீதமுள்ள இடங்கள் காலியாக காத்திருப்பில் உள்ளது. கல்வித்துறை தளர்வு வழங்கினால் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் இச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள் என்றனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்