சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு கூறினார்.

Update: 2022-10-22 20:01 GMT

பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் கூறியதாவது:-

பெரம்பலூர் சரகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களுக்கான புதிய அபராத தொகை வருகிற 28-ந்தேதி முதல் கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே இளைஞர்கள் தங்களது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று வருவதை காணமுடிகிறது. இனி அதிவேகமாக சென்றால் அபராதமாக ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும்.

இதேபோல் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றால் ஒரு பயணிக்கு ரூ.200 என்ற வகையில், அதில் உள்ள கூடுதல் பயணிகளுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். எனவே ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கே பயணிகளை டிரைவர்கள் ஏற்ற வேண்டும். நிறுத்தம் இல்லாத இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது. இதேபோல் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்றால் புதிய அபராத தொகையாக குறைந்தது ரூ.20 ஆயிரம் விதிக்கப்படும். 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்