அரசு பள்ளியில் நிர்வாகக்குழு கூட்டத்தை புறக்கணித்த பெற்றோர்கள்

ம.புடையூர் அரசு பள்ளியில் நிர்வாகக்குழு கூட்டத்தை மாணவர்களின் பெற்றோர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-09 18:52 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே ம.புடையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நிர்வாகக்குழுவின் மறு கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. இதற்கு ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. மேலும் போதுமான அளவுக்கு ஆசிரியர்களும் இல்லை. குறிப்பாக பள்ளி தலைமை ஆசிரியை சரியான முறையில் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலைமை நீடித்தால் பள்ளியை விரைவில் மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை கேட்ட தலைமை ஆசிரியை பவானி, கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் வெளியே செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

புறக்கணிப்பு

அப்போது தலைமை ஆசிரியைக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களிடம் ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் சாந்தி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும் அவர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியே சென்றனர். இதனால் கூட்டம் பாதியில் நின்றது. 

Tags:    

மேலும் செய்திகள்