அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை

மாணவர்களை அழைத்து வர வாகனங்கள் வராததை கண்டித்து அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

Update: 2022-10-15 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் கல்வி மாவட்டத்தில் அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு வரும் பழங்குடியின மாணவர்கள் உள்ளிட்ட பிற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் வாகன வசதி இல்லாத தொலைதூரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் புளியம்பாறை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக இயக்கப்பட்டு வந்த 2 தனியார் ஜீப்புகள் மற்றும் ஆட்டோக்கள் நேற்று முன்தினம் முதல் இயக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது தனியார் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மாணவர்களை காலை, மாலை அழைத்து வர வாகனங்கள் வருவதில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறினார். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்