செஞ்சி அருகே ஆசிரியரை நியமிக்கக்கோரி அரசு பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்
செஞ்சி அருகே ஆசிரியரை நியமிக்கக்கோரி அரசு பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 140 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கணித ஆசிரியர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் மற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கணித பாடத்தை நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமும் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்களின் பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள், பள்ளி கேட்டை பூட்டி குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் ஆசிரியர்களை நியமனம் செய்வதாக உறுதியளித்தார். இதையேற்ற பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் மாணவர்கள் அவர்களது வகுப்புக்கு சென்றனர்.
பரபரப்பு
இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் நடத்திய போராட்டம் குறித்து அறிந்த விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உடனடியாக வேறு ஒரு பள்ளியில் இருந்து கணித ஆசிரியரை சிட்டாம்பூண்டி பள்ளிக்கு தற்காலிகமாக நியமனம் செய்வதாக தெரிவித்தார். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.