நகராட்சி பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகை

சீருடை, நோட்டு-புத்தகம் முறையாக வழங்கக்கோரி விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

Update: 2022-07-01 17:31 GMT

விழுப்புரம்

நகராட்சி பள்ளி

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியின் வளாகத்திலேயே தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ- மாணவிகள் மிகுந்த இடநெருக்கடிக்கு மத்தியில் கல்வி பயின்று வருகின்றனர். இதுசம்பந்தமாக ஏற்கனவே மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பெற்றோர் முற்றுகை

இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகளுடன் நேற்று காலை பள்ளிக்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே அளவிலான சீருடை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அணிவதில் சிரமம் இருப்பதாகவும், இதனால் தாங்கள் செலவழித்து புதிய சீருடை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதால்தான் அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம், மாணவர்களுக்கான சலுகைகளை முறையாக தராததால் அனைத்தையும் நாங்கள் செலவழித்து பிள்ளைகளை படிக்க வைக்க அரசு பள்ளிகள் எதற்கு என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இப்பள்ளிகளில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், இதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் தெரிவித்த பெற்றோர்கள், மாணவ- மாணவிகளுக்கு முறையாக நோட்டு- புத்தகம் வழங்கக்கோரியும் அவர்கள் முறையிட்டனர்.

பேச்சுவார்த்தை

உடனே மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்