உடுமலையை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் சென்று வீணாகி வருகிறது.
பி.ஏ.பி.பாசனம்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த திட்டத்தில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 3 லட்சத்து 77ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தற்போது 2-வது மண்டல பாசனத்திற்கு 2-வது சுற்று தண்ணீர் விடப்பட்டுள்ளது. இதில் திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஆங்காங்குள்ள கிளைகால்வாய்கள் மூலம் பாசனப்பகுதிகளுக்கு சென்று கொண்டுள்ளது.
விரயமாகும் தண்ணீர்
இதில் உடுமலையை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட ஏ.எஸ்.ஜி.நகருக்கு அருகே மருள்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் பி.ஏ.பி.கிளை கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது.
அத்துடன் அருகில் உள்ள காலி இடத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பாசனத்திற்கு செல்லவேண்டிய தண்ணீர் விரயமாகிறது.
அத்துடன் கடைமடைக்கு சென்று சேர வேண்டிய தண்ணீரின் அளவும் குறையக்கூடும். அதனால் பாசனத்திற்கான தண்ணீர் விரயமாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஆகியோர் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.