பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழா:விதிகளை மீறிய 19 வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவி்ன்போது விதிகளை மீறிய 19 வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்பு வீரசக்க தேவி கோவில் திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 7 இடங்களிலும், ஊரக உட்கோட்டத்தில் 7, திருச்செந்தூர் 6, ஸ்ரீவைகுண்டம் 7, மணியாச்சி 6, கோவில்பட்டி 9, விளாத்திகுளம் 9, சாத்தான்குளம் 6 இடங்கள் ஆக மொத்தம் 57 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள், 68 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 160 போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தட்டப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒரு கனரக வாகனம் மற்றும் 5 மோட்டார் சைக்கிள் மீதும், திருச்செந்தூர் தாலுகா மற்றும் கோவில் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 4 இருசக்கர வாகனங்கள் மீதும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு மோட்டார் சைக்கிள், ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் ஒரு கனரக வாகனம், 7 கார்கள் உள்பட 19 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.