நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வால், வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பில்லை என்றாலும், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரிய பாதிப்பு இல்லை
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் நூல் முக்கிய தேவையாக உள்ளது. நூல் விலையை அடிப்படையாக கொண்டே ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பருத்தி விலையை வைத்தே நூற்பாலைகள் நூல் விலையை மாதந்தோறும் அறிவித்து வந்த நிலையில் தற்போது பருத்தி விலை உயர்வு காரணமாக நூல் விலையை 1 மாதம் வரை நிர்ணயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அறிவித்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று நூல் விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. 15 நாட்களில் நூல் விலை உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன்கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் பருத்தி பஞ்சின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் பருத்தி விலை உயர்வடைந்ததால் நூல் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட நூற்பாலைகள் மட்டும் நூல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. பஞ்சு விலை குறையும் போது நூல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு பெரிய பாதிப்பு என்பது கிடையாது. ஒரு ஆடைக்கு ரூ.1 என்ற அளவில் விலை உயரும். இதை விட நூல் விலை அதிகமாக உயர்ந்தால் நாங்கள் பேசி முடிவு செய்ய வேண்டி வரும்.
ஏமாற்றிய ஓணம் பண்டிகை ஆர்டர்
சைமா துணை தலைவர் பாலசந்தர்:-
வடமாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் பஞ்சு விலை உயர்ந்துள்ளது. அதன்காரணமாக நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த நூல் விலை உயர்வு என்பது உள்நாட்டு ஆடை உற்பத்தியில் பெரியபாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 8 மாதங்களாக பனியன் உற்பத்தி மந்தமாக இருந்த நிலை மாறி, நூல் விலை குறைந்ததால் தொழில் செய்யக்கூடிய நிலை உருவானது. தொழிலை செய்ய தொடங்கும் இந்த நேரத்தில் நூல் விலை உயர்ந்துள்ளது என்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி நாங்கள் ஆடைகளின் விலையை உயர்த்த முடியாது.
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் இருந்து உள்நாட்டு ஆடை தயாரிப்பு ஆர்டர் அதிகம் வரும். ஆனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆர்டர் என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. கேரளாவில் பணப்புழக்கம் குறைந்துவிட்டதாகவும், ஆடை விலை உயர்வால் வாங்கும் திறன் இல்லை என்றும் கூறுகிறார்கள். வர்த்தகர்கள் ஆர்டரை வெகுவாக குறைத்துவிட்டனர். பனியன் உற்பத்தி என்பது நிலையானதாக இல்லாமல் உள்ளது. இந்த நேரத்தில் நூல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
செயற்கை இழை ஆடைகள்
நூல் விலை உயர்ந்து கொண்டே சென்றால், பருத்தி ஆடைகளை வாங்குவது குறைந்து செயற்கை இழை ஆடைகளை வாங்க தொடங்கிவிட்டனர். பருத்திக்கு மாற்றாக செயற்கை இழை பனியன் ஆடைகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.
செயற்கை இழை ஆடை பனியன் உற்பத்தியை செய்யும்போது, துணியாக நமக்கு கிடைக்கும். அதை வெட்டி ஆடையாக தைத்து அனுப்ப வேண்டும். ஆனால் நம்மை நம்பியுள்ள நிட்டிங், சாயஆலை, பிராசசிங், கேலண்டரிங் தொழில்கள் பாதிக்கும். பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும். நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தகுந்த விலையில் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான் பின்னலாடை தொழிலை காப்பாற்ற முடியும்.
ஒன்றிணைய வேண்டும்
டீமா தலைவர் முத்துரத்தினம்:-
பருத்தி விலை குவிண்டால் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.62 ஆயிரமாக உயர்ந்ததால் நூல் விலை உயர்ந்துள்ளது. பருத்தி விலையை கட்டுப்படுத்தினால் மட்டுமே நூல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அளவில் ஜவுளித்துறையினர் ஒன்று சேர்ந்து நிரந்தர தீர்வு காண வேண்டும். குறிப்பாக தமிழக அளவில் ஜவுளி தொழில்துறையினர் ஒன்றிணைய வேண்டும். இதற்கான கூட்டம் பல்லடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நிரந்தர முடிவு என்பது பருத்தி விலையை கட்டுப்படுத்துவது தான். இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும். மின்கட்டண உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளோம். இதே நிலை நீடித்தால் வேறு மாநிலங்களுக்கு தொழில் சென்றுவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.