பனிமயமாதா ஆலய தங்கத்தேர் திருவிழா:தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்
பனிமயமாதா ஆலய தங்கத்தேர் திருவிழாவைமுன்னிட்டு தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 11 நாட்களுக்கு போக்குவரத்தை மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
போக்குவரத்து மாற்றம்
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களுக்கான வழித்தடங்கள் மாற்றப்பட்டு உள்ளன.
அதன்படி வருகிற 2-ந் தேதி வரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து திரேஸ்புரம் செல்லும் டவுன் பஸ்கள் டபிள்யூ.ஜி.சி. ரோடு, ரெயில்நிலையம், இந்திராகாந்தி சிலை வழியாக செல்ல வேண்டும். திரேஸ்புரத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் கால்டுவெல் பள்ளி அருகே மேற்கு நோக்கி செல்லும் ரோட்டில் திரும்பி 1-ம் கேட், 2-ம் கேட், 4-ம் கேட் வழியாக செல்ல வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து முத்தையாபுரம் செல்லும் டவுன் பஸ்கள் டபிள்யூ.ஜி.சி ரோடு, பழைய மாநகராட்சி சந்திப்பு, தீயணைப்பு நிலைய சந்திப்பு, அந்தோணியார் கோவில், ஆல்பர்ட் அன்கோ சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். வருகிற 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை பழைய பஸ் நிலையம் முதல் கிழக்கு நோக்கி செல்லும் டவுன் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் பழைய மாநகராட்சி சந்திப்பு, தீயணைப்பு நிலைய சந்திப்பு, அந்தோணியார் கோவில் வழியாக செல்ல வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து திரேஸ்புரம் செல்லும் பஸ்கள் டபிள்யூ.ஜி.சி ரோடு, பழைய மாநகராட்சி சந்திப்பு, காசுக்கடை பஜார், 1-ம் கேட், மட்டக்கடை, திரேஸ்புரம் வழியாக செல்ல வேண்டும். திரேஸ்புரத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் பக்கிள் ஓடையை ஒட்டி உள்ள ரோடு வழியாக கருப்பட்டி ஆபீஸ் சந்திப்பு, 4-ம் கேட், வழியாக செல்ல வேண்டும்.
புதிய துறைமுகம்
புதிய துறைமுகம், தெர்மல்நகரில் இருந்து வரும் பஸ்கள் பீச் ரோடு விலக்கு, திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா, காமராஜ் கல்லூரி, வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு வர வேண்டும். கனரக, சரக்கு வாகனங்கள் திருவிழா நடைபெறும் பகுதிகளில் வருவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை. டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் இருந்து பழைய துறைமுகம், மாதா கோவில் வழியாக தெற்கு பீச் ரோடு செல்லும் வாகனங்கள் திருவிழா காலங்களில் அனுமதிக்கப்படாது. அவ்வாறு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையாக பழைய மாநகராட்சி சந்திப்பு, தீயணைப்பு நிலைய சந்திப்பு, பி.பி.எம்.டி. சந்திப்பு, லயன்ஸ் டவுன், ரோச் காலனி, எஸ்.ஆர்.எம். ஓட்டல் வழியாக தெற்கு பீச் ரோடு செல்ல வேண்டும். திருவிழா கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் தீயணைப்பு நிலைய சந்திப்பில் இருந்து வி.இ.ரோடு வழியாக காமராஜ கல்லூரி, திருச்செந்தூர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
ஒத்துழைப்பு
இந்திரா காந்தி சிலை வழியாக பழைய துறைமுகம், மாதா கோவில் வழியாக தெற்கு பீச் ரோட்டில் செல்லும் வாகனங்கள் திருவிழா காலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு மாற்று பாதையாக இந்திராகாந்தி சிலையில் இருந்து காசுக்கடை பஜார், பழைய மாநகராட்சி சந்திப்பு, தீயணைப்பு நிலைய சந்திப்பு, பி.பி.எம்.டி. சந்திப்பு, லயன்ஸ் டவுன், ரோச் காலனி, எஸ்.ஆர்.எம். ஓட்டல் வழியாக தெற்கு பீச் ரோடு செல்ல வேண்டும். பி.பி.எம்.டி சந்திப்பு, பெல் ஓட்டல் சந்திப்பு வழியாக தெற்கு பீச் ரோட்டில் செல்லும் வாகனங்கள் திருவிழா காலங்களில் அனுமதிக்கப்படாது. அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதையாக பி.பி.எம்.டி. சந்திப்பு, லயன்ஸ்டவுன், ரோச் காலனி, எஸ்.ஆர்.எம். ஓட்டல் வழியாக தெற்கு பீச் ரோடு செல்ல வேண்டும்.
மேலும் தூத்துக்குடி தூய பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவிழா நடைபெறும் நாட்களில் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும், திருவிழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள் போலீசுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.