பனிமயமாதா ஆலய திருவிழா கொடி பவனி
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடி பவனி திங்கட்கிழமை நடந்தது
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடிபவனி நேற்று மாலை நடந்தது. இன்று அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பனிமயமாதா ஆலயம்
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கன மக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. 6 மணிக்கு பாதிரியார் லெரின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் கொடி பவனி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம்
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி, 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கொடியேற்றம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி 6-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி, 11.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது.
சப்பர பவனி
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.