ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்:விவசாயி சரமாரி வெட்டிக்கொலை

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-08-07 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 70), விவசாயி.

இவருக்கு மனைவி, 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

ரூ.1½ லட்சம்

அதே பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (45). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணத்தேவைக்காக தனது வயலை சொக்கலிங்கத்தின் மகள் இசக்கியம்மாளிடம் ஒத்திக்கு கொடுத்து, ரூ.1½ லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை சொக்கலிங்கம் மூலமாக பூல்பாண்டி வாங்கினார்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவில் சொக்கலிங்கம் தனது வீட்டின் முன் நின்று கொண்டு இருந்தார். அப்போது, பூல்பாண்டி, அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (27) ஆகியோர் அங்கு வந்தனர்.

பூல்பாண்டி மேற்கொண்டு ரூ.50 ஆயிரம் தேவைப்படுவதால், தங்களது மகளிடம் இருந்து பணம் வாங்கித்தரும்படி சொக்கலிங்கத்திடம் கேட்டார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி, சாமிநாதன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சொக்கலிங்கத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

குடும்பத்தினர் கதறல்

இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவைகுண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது சோகமாக இருந்தது.

2 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பூல்பாண்டி, சாமிநாதன் ஆகியோைர நேற்று பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்