சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

நெல்லை மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

Update: 2023-04-02 20:15 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

பங்குனி உத்திர திருவிழா

அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள்.

குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும்.

இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது.

பொங்கலிட்டு வழிபாடு

கோவிலில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். அவருக்கு அருகில் சுடலைமாடசாமி, சங்கிலி பூதத்தார், அக்கினி மாடசாமி, சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடி மாடசாமி, முண்டசாமி, பேச்சி, பிரம்மராட்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் இருக்கும்.

பங்குனி உத்திர திருவிழா 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.

சாஸ்தா கோவில்கள்

கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா நடக்கிறது.

சிறப்பு பூஜைகள்

இதையொட்டி 4-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை முதல் 5-ந் தேதி  (புதன்கிழமை) இரவு வரை சிறப்பு பூஜைகளும், அன்னதானங்களும் நடக்கிறது.

பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்