முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

செஞ்சி பகுதி முருகர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-06 18:45 GMT

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அருகே ஈயக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகலில் அலங்கரிக்கப்பட்ட வள்ளி தெய்வானை சமேத முருகர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளியதும், பக்தர்கள் தீமிதித்தும், முதுகில் அலகு குத்தியும் சிறியதேர்கள், கல் உருளைகள் ஆகியவற்றை இழுத்தும், பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

வேல் சாத்தும் நிகழ்ச்சி

செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகபெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதிய வேல் சாத்தப்பட்டது.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபாடு செய்தனர். பின்னர் முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பொன்பத்தி

செஞ்சி தாலுகா பொன்பத்தி கிராமத்தில் உள்ள சக்திவேல் முருகன் கோவிலில் 50-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மீது மிளகாய் பொடி அபிஷேகமும், மாவு இடித்தல், மஞ்சள் இடித்தல், செடல் சுற்றுதல், பறந்து போய் முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்தல், மழுவு அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் வேல் அணிந்து கொக்கி தேர் இழுத்தல் நிகழ்ச்சியும், காவடி ஊர்வலமும், அக்னி சட்டி ஊர்வலமும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்