பங்குனி படையல் விழா

பொய்சொல்லா மெய் அய்யனார் கோவிலில் பங்குனி படையல் விழா நடைபெற்றது.

Update: 2023-04-07 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட பாரி ஆண்ட பரம்ப மலையில் பொய்சொல்லா மெய் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சன்னாசி சுவாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி படையல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக சன்னாசி சுவாமிக்கு பால், பழம், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சன்னாசி சுவாமி சிலை முன்னிலையில் வடிக்கப்பட்ட சாதத்தை தரையில் விரித்து வைக்கோல் மீது கொட்டப்பட்டு லிங்க வடிவம் பிடிக்கப்பட்டது.

பின்னர் குன்றக்குடி மடாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்தார்கள். அன்னத்திற்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து சிவனடியார்களுக்கு தலை வாழை இலை போட்டு பூஜிக்கப்பட்ட அன்னத்தை வைத்து திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் பெறவும், மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், நோய்நொடி இன்றி வாழ வேண்டி சிவனடியார்கள் கையில் மடியேந்தி பிடி சாதம் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரான்மலை பாப்பாபட்டி வேளார் வம்சாவளி பங்காளிகள் மற்றும் பொய் சொல்லா மெய் அய்யனார் கோவில் பூஜகர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்