பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கொலையில் 3 பேர் கைது
நெல்லை அருகே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வார்டு உறுப்பினர் கொலை
நெல்லை பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் ராஜாமணி (வயது 30). கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினரான இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஆடுகளை அழைத்து வருவதற்காக சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று ராஜாமணியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த ராஜாமணியை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜாமணியின் உறவினர்கள், கிராம மக்கள், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து, ஆஸ்பத்திரி முன்பாக அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீஸ் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று ராஜாமணியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, கீழநத்தம் கிராமத்தில் அமர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
3 பேர் கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கீழநத்தம் மேலூரைச் சேர்ந்த சண்முகம் என்ற பங்கு மணி மகன் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி, கீழநத்தம் தெற்கூர் கண்ணம்மாள் காலனியைச் சேர்ந்த சேர்ந்த ராமர் மகன் இசக்கிமுத்து (20), கீழநத்தம் தெற்கூரைச் சேர்ந்த விநாயகம் மகன் மாயாண்டி (20) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான 3 பேரும் போலீசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று நாங்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றபோது, எங்களைப் பார்த்த ராஜாமணி, எதற்காக முறைக்கிறீர்கள்? என்று கேட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜாமணியை வெட்டிக்கொலை செய்ததாக தெரிவித்தனர்.