ஊராட்சி செயலர்கள் 15-ந் தேதி போராட்டம்
கோாிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் வருகிற 15-ந் தேதி முதல் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறினார்.
கோாிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் வருகிற 15-ந் தேதி முதல் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறினார்.
சட்டத்தில் திருத்தம்
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளில் செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அரசு பொறுப்பேற்றவுடன் முதல்-அமைச்சர் ஊராட்சி சட்டம் 104 மற்றும் 106 பிரிவுகளில் திருத்தம் கொண்டு வந்தார். ஊராட்சி செயலரை பஞ்சாயத்து தலைவர் நியமனம் செய்வதிலும் திருத்தம் கொண்டு வந்தார். ஆனால் சட்ட திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் அமலுக்கு வரவில்லை.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்களை 34 முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். மேலும் கடந்த மாதம் சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்.
போராட்டம்
ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி செயலர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும். ஊதியம் கருவூலம் மூலம் வழங்கப்பட வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி செயலார்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களை தண்டிக்கும் அதிகாரம் அரசு அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி முதல் காலி பணியிடங்கள் போக மீதமுள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் விடுப்பு எடுத்து சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.
சேவைகள் பாதிப்பு
கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் தொடரும். இதனால் ஊராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் முடங்குவதோடு கிராம மக்களுக்கான சேவைகளும் பாதிக்கும்.
எனவே முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.