ஊராட்சி மன்ற தலைவரின் வீடுகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சோதனை
புதுக்கோட்டை அருகே பண மோசடி புகாரில் ஊராட்சி மன்ற தலைவரின் வீடுகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆண்டிகுளத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). இவர் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது கடன் வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் உள்ளது. இதையடுத்து, சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் பன்னீர்செல்வத்தின் மீது மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஆலங்குடி வந்தனர்.
வீடுகளில் அதிரடி சோதனை
ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கே.வி.எஸ். தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் தோட்டத்தில் உள்ள மற்றொரு வீடு, பாரதிதாசன் சாலையில் உள்ள வணிக வளாகம், எம்.ராசியமங்கலத்தில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம், கோவிலூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், அரிமளத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் என பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இந்த சோதனையின் போது வழக்கு தொடர்பாக ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என பார்வையிட்டனர்.
பண மோசடி புகார்
இது குறித்து போலீசார் கூறுகையில், ''பன்னீர்செல்வத்தின் மீதான பண மோசடி புகார் தொடர்பாக சோதனை நடத்த கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்டவை குறித்து கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்படும்'' என்றனர்.
சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசாரின் சோதனையையொட்டி ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.