நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடந்தது.
சிதம்பரம்,
ஆனித்திருமஞ்சன விழா
சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 5-ந்தேதியும், 6-ந்தேதி ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நேற்று முன்தினம் நள்ளிரவு புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கீழவீதியில் நள்ளிரவு 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட முத்து, புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் முத்து, புஷ்ப பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதிஉலா நிகழ்ச்சி முடிந்தவுடன் பஞ்சமூர்த்திகள் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவ சபையை சென்றடைந்தது. இ்த்துடன் ஆனித்திருமஞ்சன விழா நிறைவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.