அணைக்கட்டு
பள்ளிகொண்டா பேரூராட்சி சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு ஒரு தி.மு.க. கவுன்சிலர் தவிர 17 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பேரூராட்சியில் திட்டப்பணிகள் குறித்த அறிக்கையை கணினி பொறியாளர் சந்தோஷ் வாசித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர் நாராயணன் பேசும்போது, கழிவுநீர் கால்வாய், சாலைகள், தெருவிளக்குகளுக்கு அமைக்க டெண்டர் விட்டும் இதுவரை பணி முடிக்கவில்லை.
விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் என்றார்.
கவுன்சிலர் பழனி கூறுகையில், 30-க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் உள்ளன இவர்கள் பயன்படுத்தும் கோழி கழிவுகளை பாலாற்று கரையில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அவர்களுக்கு அபராதம் விதித்து, பாலாற்று கரையில் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
மேலும் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.