பல்லடம் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கியது தனிப்படை

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேசன் என்பவரை தனிப்படை போலீசார் நெருங்கியுள்ளனர்.

Update: 2023-09-04 19:28 GMT

திருப்பூர்,

பல்லடம் அருகே பருத்திக்கொட்டை வியாபாரம் செய்துவந்தவர் செந்தில் குமார். இவரிடம் முன்பு வேலை செய்துவந்த டிரைவர் ஒருவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் நேற்றுமுன் தினம் செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர்.

இதை பார்த்த செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளனர். இவருடைய அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மோகன்ராஜ், மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினாம்மாள் ஆகியோரையும் கொலை செய்து விட்டு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் தப்பி செல்லாதவாறு பல்லடத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதான செல்லமுத்து என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேசன் என்பவரை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை நெருங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெங்கடேசன் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்