பாக். வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம்: அமைச்சர் உதயநிதி கண்டனம்

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-15 01:38 GMT

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆமதாமாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டத்தின்போது, முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தின் பரவி வருகின்றன.

இந்த நிலையில், முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறை ஏற்க முடியாது. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது." இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

 

Tags:    

மேலும் செய்திகள்