திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தல் அமைத்தல்-வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்
ஆரப்பூர விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தல் அமைத்தல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவாரூர்;
ஆரப்பூர விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தல் அமைத்தல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இந்த கோவில் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை திருவாரூர் தேருக்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்டம் முடிந்த சில நாட்களில் தெப்ப திருவிழா ஆடிப்பூர விழா என திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடக்கும் விழாக்களால் கோவில் விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
கொடியேற்றம்
இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையுடன் வீதியுலா நடந்தது. பின்னர் கமலாம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. தொடர்ந்து ரிஷப படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து மங்கள இசை முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.விழா நாட்களில் கோவிலில் பூதம், யானை, வெள்ளி ரிஷபம், கைலாசர் வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி விதிஉலா நடந்தது. இந்தநிலையில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேலும் கமலாம்பாள் தேர் கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.
பந்தல் அமைக்கப்படுகிறது
தற்போது கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்கிறது. ் தியாகராஜா் கோவில் சன்னதி அருகில் தரை தளத்தில் வண்ண கோலங்கள் வரையப்பட்டு அலங்காரப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலில் சாமி புறப்பாடு நடக்கும் சப்பரத்தில் வர்ணங்கள் பூசம் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.மேலும் கோவில் வளாகம் முழுவதும் ஒலிபெருக்கி அமைக்கும் பணிகள், கோவில் தூண்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கோவிலின் கிழக்கு வாசல் பகுதி மற்றும் கோவில் உள் பகுதியில் வளர்ந்துள்ள செடிகொடிகளை கோவில் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.