பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.

Update: 2023-07-28 19:35 GMT

புலிகள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், நெல்லை அரசு அருங்காட்சியகம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் சார்பில் "புலிகளை காப்போம்" என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 20 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு தலையணை பகுதிக்கு சூழல் சுற்றுலா செல்ல உள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டம் துணை இயக்குனர் செண்பகவல்லி அறிவுறுத்தலின்படி முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காரையாறு அரசு பழங்குடியின உண்டி உறைவிட பள்ளியில் புலிகள் தின நிகழ்ச்சி நடந்தது. முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி, வனவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனக்காப்பாளர் அசோக்குமார் வரவேற்றார். இதில் மாணவர்களுக்கு புலியின் குண நலன்கள், தன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. புலிகள் சம்பந்தமாக மாணவ, மாணவிகளுடன் வனத்துறையினர் கலந்துரையாடினர். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு புலிகள் வரையும் ஓவியப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் வனக்காப்பாளர் பேராட்சி செல்வி, ஆசிரியர்கள் பிரபாவதி மரியம்மாள், மாரியம்மாள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகச் செல்வி, சங்கர வடிவு, உதவியாளர் செல்லச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்