மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பாட்டி வீட்டில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பாட்டி வீட்டுக்கு சென்ற பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்தது தெரியாமல் பிணத்துடன் 2 நாட்கள் மூதாட்டி வசித்தது தெரிந்தது.

Update: 2022-10-31 22:20 GMT

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் விவேகானந்தா நகர் காந்தி தெருவில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 48), பெயிண்டர். இவருடைய மனைவி அம்சவல்லி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் சிறு வயதிலிருந்தே உடல்நல குறைவால் நடக்க முடியாத நிலையில் உள்ளார். மேலும் இவர்களுடன் 104 வயதான பாலாஜியின் பாட்டி விசாலாட்சியும் வசித்து வருகிறார். பாலாஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. உடல்நல குறைவாக உள்ள மகளையும், வயது முதிர்ந்த பாட்டியையும் பராமரிப்பது சிரமமாக இருப்பதாகவும், எனவே பாட்டியை மற்ற பேர பிள்ளைகள் வீட்டில் சில நாட்கள் தங்கச்சொல்லும்படியும் அம்சவல்லி கூறியதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பாலாஜி, மனைவியுடன் கோபித்துக்கொண்டு தனது பாட்டி விசாலாட்சியுடன் அவருக்கு சொந்தமான வீட்டுக்கு சென்றார்.

அந்த வீட்டின் 2-வது மாடியில் பாலாஜி, புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் 2 நாட்கள் ஆகியும் தனது கணவர் வீட்டுக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அம்சவல்லி, பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தார்.

பிணத்துடன் தங்கிய மூதாட்டி

இந்தநிலையில் நேற்று மூதாட்டி விசாலாட்சி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போதுதான் விசாலாட்சி வீட்டின் 2-வது மாடியில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டதும், அவர் இறந்து 2 நாட்கள் ஆகிவிட்டதால் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியதும் தெரிந்தது.

மேலும் பேரன் தற்கொலை செய்து கொண்டதுகூட தெரியாமல் 2 நாட்களாக பேரன் உடலுடன் மூதாட்டி விசாலாட்சி அந்த வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. பாலாஜி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்