புழல் அருகே குடிபோதை தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை

குடிபோதை தகராறில் ெபயிண்டரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-21 23:55 GMT

புழல்,

சென்னையை அடுத்த புழல் அண்ணா நினைவு நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 33). பெயிண்டர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பரான மணி(32) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு புழலில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்தினார். பின்னர் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நள்ளிரவில் மீண்டும் மணி, மது குடிக்க நினைத்தார். இதற்காக சரவணன் வீட்டுக்கு சென்ற அவர், இருவரும் சேர்ந்து மீண்டும் மது அருந்தலாம் என அழைத்தார். ஆனால் அதற்கு சரணவன் வரமறுத்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இதனால் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இருவரும் குடிபோதையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மணி, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து சரவணன் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் மணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்துவந்த புழல் போலீசார், கொலையான சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை புழல் அருகே பதுங்கி இருந்த மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்