பள்ளி மாணவரை கத்தியால் குத்திய பெயிண்டர் கைது
பள்ளி மாணவரை கத்தியால் குத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் விஷால் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் விஷால் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் விஜயகுமார் (25) என்பவர் வந்துள்ளார். அப்போது விஜயகுமாருக்கும், விஷாலுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷாலை கை உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காயமடைந்த விஷால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து, விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.