பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம்
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவ செவிலியர் சங்கம் சார்பாக 7-வது முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் கலைக்குருச்செல்வி தலைமை தாங்கினார். கல்லூரி இணை பேராசிரியையும், முன்னாள் மாணவ சங்க ஒருங்கிணைப்பாளரும் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி திட்ட இணை ஒருங்கிணைப்பாளருமான சுமதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் சோலா பெர்ணாண்டோ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், நேர்காணலுக்கு முன்னரும், நேர்காணலின் போதும் எவ்வாறு நம்மை தயார்படுத்திக் கொள்வது, நேர்காணல் செய்பவரிடம் எவ்வாறு உரையாட வேண்டும், எவ்வாறு நேர்காணல் தற்குறிப்பினை தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் விளக்கக்காட்சி மூலம் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பின்னர், முன்னாள் மாணவி மு.முத்து இருளாயி, செவிலியர் பணியாளர்களின் பல்வேறு பிரிவுகள் பற்றியும், டிப்ளமோ, பி.எஸ்.சி நர்சிங் மற்றும் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் எந்தெந்த பிரிவுகளில் பணியாற்றலாம் என்றும் விளக்கக்காட்சி மூலம் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கல்லூரி இணை பேராசிரியை, வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முன்னாள் மாணவ சங்க ஒருங்கிணைப்பாளர் சங்கீதா நன்றி கூறினார். 4-ம் ஆண்டு மாணவிகள் ஆ.சங்கீதா மற்றும் பி.சிங்கப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.