காந்தாவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி

காந்தாவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி

Update: 2023-02-16 19:48 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக காந்தாவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் செய்யும் பணி நடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொள்முதல் செய்ய கோரிக்கை

பாபநாசம் தாலுகா காந்தாவனம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி நடைபெற்று வருகிறது, காந்தாவனம் பகுதியில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு கொள்முதல் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் பலர் அறுவடை செய்த நெல்மணிகளை அரசு நெல்கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து பலநாட்களாக காத்திருக்கும் நிலை இருந்தது.

இதனால் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். எனவே விவசாயிகளின் நலன்கருதி காந்தாவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகள் உடனடியாக காந்தாவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் செய்யும் பணியை தொடங்கினர். இந்த பணியை ஒன்றியக்குழு உறுப்பினரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான குமார் தொடங்கி வைத்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர் ராதிகாகோபிநாத், ஒன்றிய கவுன்சிலர் வள்ளி விவேகானந்தன், ஊராட்சிமன்ற தலைவர்கள் பழனி, கிருஷ்ணவேணி கருப்பையன், கண்ணன் மற்றும் விவசாயிகள், கொள்முதல்நிலைய ஊழியர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்