நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மல்லையன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் டில்லிபாபு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் அர்ஜுணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட நிர்வாகி இளம்பரிதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைகளில் நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க அவர்கள் சாகுபடி செய்யும் விவசாய நிலங்களுக்கு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும். தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அரூர் தாலுகா கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து வரும் தண்ணீரை நீரேற்றம் செய்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும். அரூரில் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை அமைக்க வேண்டும். மொரப்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும். காளிகரம்பு வழியாக மிட்டாரெட்டி அள்ளி வரை மலையின் குறுக்கே தார்சாலை அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.