திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.
குறுவை சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினால் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ந் தேதி திறக்கப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதியே திறக்கப்பட்டது. இந்த ஆண்டு 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து குறுவை சாகுபடி பருவத்தில் விளைந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டை விட குறைவு
இதில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 707 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தும் கொள்முதல் என்பது குறைந்துள்ளது.
இதற்கு காரணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை கடைபிடிக்கப்பட்டது தான் என விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
தனியாரிடம் விற்பனை
இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் அடிக்கடி பெய்த கனமழையின் காரணமாக நெல்மணிகளின் ஈரப்பதம் என்பது அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசு மத்திய உணவுத்துறைக்கு கடிதம் எழுதி 21 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் 19 சதவீதம் மட்டுமே நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.
இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் நெல்லின் ஈரப்பதத்தினை கருத்தில் கொண்டு தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்திருப்பினும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் கடந்தை ஆண்டை விட குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.