பிரதம மந்திரியின் நெல் காப்பீடு திட்டத்தில் குளறுபடி

பிரதம மந்திரியின் நெல் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-10-29 18:45 GMT

இளையான்குடி, 

பிரதம மந்திரியின் நெல் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயிர்கடன்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 கிராம ஊராட்சிகளும், 150-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இவற்றில் இளையான்குடி, தாயமங்கலம், சாலைக்கிராமம், அ.திருவுடையார்புரம், சூராணம் ஆகிய வருவாய் பிர்காவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் குரூப் என நில பட்டாக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்யும் பட்டாக்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் சமர்ப்பித்து நெல் விவசாயம் செய்வதாக அடங்கல் பெற்று வேளாண்மை கடன் வங்கிகளிலும், ஆன்லைன் மூலமாகவும் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து நெல் பயிருக்கான காப்பீடுகளை செய்து வருகின்றனர். இளையான்குடி ஒன்றியத்தில் 19 வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அடங்கல் பெற்று வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெறுவதற்காகவும், நெல் பயிருக்கான காப்பீடு திட்டத்தில் சேர்ந்து தங்களுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஸ், பாக்டம்பாஸ் ஆகிய ரசாயன உரங்களை பெற்று வருகின்றனர்.

புதிய நிபந்தனைகள்

இந்நிலையில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூட்டுறவு வங்கியில் இணைக்கப்பட்ட வருவாய் கிராமங்களின் குரூப் மட்டுமே தங்களிடம் பயிர் கடன் பெற முடியும். கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் அரசு மானியங்கள் தங்கள் வங்கியில் சேராத வருவாய் குரூப் கிராமங்களுக்கு வழங்குவதில் சிரமம் ஏற்படும் அல்லது அரசு மானியம் கடன் தள்ளுபடி செய்ய இயலாது என கூறுகின்றனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக குறிப்பிட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீடு செய்து கடன் பெற்று காப்பீடு செய்து வந்த விவசாயிகளுக்கு இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

உதாரணமாக கடந்த 5 ஆண்டுகளாக வளையனேந்தல் கிராம விவசாயிகள் கருஞ்சுத்தி குரூப் மற்றும் தெற்கு கீரனூர் குரூப் அடங்கிய விவசாயிகள் கோட்டையூர் கடன் சங்கத்தில் கடன் பெற்று வந்துள்ளனர். தற்போது கருஞ்சுத்தி குரூப் விவசாயிகள் கரும்பு கூட்டம் விவசாய சங்க செயலாளரிடம் வில்லங்கம் ஏதும் இல்லை என கடிதம் பெற்று வர வேண்டும் என புதிய நிபந்தனைகள் விதிக்கின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

இதே போல ஒவ்வொரு கூட்டுறவு கடன் சங்கத்திலும் தங்களுடன் இணைக்கப்படாத வருவாய் குரூப் விவசாயிகளுக்கு கடன் கொடுத்தால் அதற்கு அரசு மானியம் மற்றும் தள்ளுபடி செய்யும்போது கிடைக்காது என கூறுகின்றனர்.

இது போன்ற புதிய கட்டுப்பாடுகள் விதிப்பதால் வெளியூர், வெளிநாடுகளில் உள்ள தங்களின் வாரிசுகளிடம் கையொப்பங்கள் வாங்குவதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் இது போன்ற குளறுபடிகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்