ராமநத்தம் அருகே ரத்த காயங்களுடன் பள்ளத்தில் கிடந்த நெல் அறுவடை எந்திர உரிமையாளர் சாவு போலீசார் விசாரணை
ராமநத்தம் அருகே ரத்த காயங்களுடன் பள்ளத்தில் கிடந்த நெல் அறுவடை எந்திர உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநத்தம்,
நெல் அறுவடை எந்திர உரிமையாளர்
ராமநத்தம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கதிர்காமன் (வயது 47). நெல் அறுவடை எந்திரத்தை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மனைவி மஞ்சுளாவிடம் தொழுதூர் சென்று வருவதாக கூறிச் சென்றார். அதன்பிறகு வெகுநேரம் ஆகியும் கதிர்காமன் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதிர்காமனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் எழுத்தூர் ஏரி அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல்...
இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கதிர்காமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்ய இறுதி சடங்குகள் நடைபெற்றது.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா தலைமையிலான ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதிர்காமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
இதனிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா மற்றும் போலீசார் கதிர்காமன் ரத்த காயங்களுடன் கிடந்த இடத்துக்கு சென்று, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, லாரி மோதிய விபத்தில் கதிர்காமன் உயிரிழந்தாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக யாரேனும் திட்டமிட்டு அவரை தாக்கி பள்ளத்தில் வீசிச் சென்றார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.