நெல் அறுவடை தொடங்கியது
கூடலூர் பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதனால் ஆதிவாசி பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதனால் ஆதிவாசி பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
நெல் விவசாயம்
கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குகிறது. தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கம் வரை மழை பெய்வதால் ஆண்டுதோறும் நெல் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக மழைக்காலத்தில் பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் பருவமழை தாமதமாக ஜூலை மாதம் பெய்ய தொடங்கியது. இருப்பினும் உடனடியாக விதை நெல்லை தூவி விவசாயப் பணியை விவசாயிகள் தொடங்கினர். தொடர்ந்து நெல் நாற்றுகளை வயல்களில் நடவு செய்து பராமரித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் நெற்கதிர்கள் விளைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில இடங்களில் தங்களது குலதெய்வ கோவில்களில் நெற்கதிர்களை படையலிட்டு அறுவடை திருவிழா கொண்டாடினர்.
அறுவடை தொடங்கியது
இந்த நிலையில் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்கதிர்கள் நன்கு விளைந்து உள்ளது. கடந்த 2 வாரங்களாக மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விளைந்த நெற்கதிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. பின்னர் காலநிலை மாற்றம் ஏற்பட்டு பகலில் வெயில் அடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து செருமுள்ளி, கம்மாத்தி உள்பட சில இடங்களில் நெல் அறுவடை செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பணியில் ஆதிவாசி பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது குறைந்த பரப்பளவில் நெல் அறுவடை நடைபெறுவதால், பெண்கள் கைகளால் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆதிவாசி பெண்கள் கூறும் போது, நெல் அறுவடை செய்யும் பணியில் ஒரு நாளைக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. இந்த பணிக்கு ஆண்கள் யாரும் வருவதில்லை. இன்னும் நிறைய கிராமங்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய காலதாமதம் ஏற்படும் என்றனர்.