மழையில் நனைந்து முளைத்த நெல்மணிகள்
திருப்பரங்குன்றம் அருகே திறந்த வெளியில் அடுக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்ததால் நெல்மணிகள் முளைத்து வீணாகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே திறந்த வெளியில் அடுக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்ததால் நெல்மணிகள் முளைத்து வீணாகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திறந்தவெளியில் மூடைகள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சியில் ஆஸ்டின்பட்டி அரசு தொற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிட்டங்கி உள்ளது. இங்கு தமிழகத்தின் தென் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகள் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை ஆலைக்கு கொண்டு சென்று அரிசியாக அரைத்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு வினியோகப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்தது. அதில் கிட்டங்கி அருகே திறந்த வெளியில் அடுக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்தன. இதனால் அவைகள் மீண்டும் நெல் பயிராக முளைத்து வளர்ந்து வீணாகி விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
இதேபோல கப்பலூர் மேலக்குயில்குடியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூடைகள் நனைந்து வீணாவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
மழையில் நெல் மூடைகள் நனைந்த தகவல் கிடைத்ததும், திருமங்கலம் கோட்டாட்சியர் அபிநயா, மதுரை துணை மண்டல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, கோட்டாட்சியர் அபிநயா குடோன் மேலாளரிடம் மழையில் நெல் மூடைகள் நனையமால் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.