நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசம்
நாகுடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது. இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி, அறந்தாங்கி- மணமேல்குடி பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதில் கடலோர பகுதியில் சரியான மழை பொழிவு இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் கருகிவிட்டது. இந்நிலையில் சுற்றியுள்ள கிராமங்களில் புகையான் நோய் தாக்குதலிலும் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கி நாசம்
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. அதை அறுவடை செய்வதற்கு எந்திரம் மூலமாக விவசாயிகள் தயாராக இருந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகுடி பகுதிகளில் சாகுபடி செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனே பார்வையிட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உரிய இழப்பீடு கிடைக்க ஆவனம் செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் கல்லணை கால்வாய் பாசனத்தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.