மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகள்

கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் கறம்பக்குடி பகுதியில் மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-09 18:45 GMT

நெல் அறுவடை

கறம்பக்குடி தாலுகாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையங்களில் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் தற்போது நெல் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

கறம்பக்குடி, வெள்ளாளவிடுதி, அம்புக்கோவில், மழையூர், திருமணஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளது.

கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

தற்போது சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கறம்பக்குடி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் ஆங்காங்கே குவித்து வைத்துள்ள நெல்மணிகள் தற்போது மழையில் நனைந்து வருகின்றன. பின்னர் ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்ய தாமதம் செய்வார்கள். எனவே குறுவை அறுவடை பணி நடைபெறும் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்