நெல்லை: சுடுகாட்டில் குழிதோண்டி பூமிக்கு அடியில் 21 நாள் விரதம் - பக்தரின் வினோத நேர்த்திக்கடன்....!
குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர் ஒருவர் சுடுகாட்டில் 6 அடி குழிதோண்டி பூமிக்கு அடியில் படுத்துக் கொண்டு விரதமிருந்து வருகிறார்.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள சங்கனாங்குளம் பகுதியை சேர்ந்த ராமையா மகன் சந்திரன்(வயது46). இவர் பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
தற்போது குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு சந்திரன் மாலை அணிந்து உள்ளார். நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சங்கனாங்குளம் சுடுகாட்டில் 6 அடி குழிதோண்டி படுத்து கொண்டு 21 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து பக்தர் சந்திரன் கூறுகையில்,
எனக்கு 9 வருடங்களுக்கு முன்பு தொண்டையில் கேன்சர் வியாதி வந்தது. பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் நோய் குணம் ஆகவில்லை. டாக்டர்கள் என் உயிருக்கு 21 நாள் கெடு விதித்தனர்.
அப்போது நான் குலசேகரப்பட்டினம் கோயிலுக்கு சென்று வழிபட்டு கடலில் நீராடினேன். உடனே நோய் குணமானது. பின்னர் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக எங்கள் ஊர் சுடுகாட்டுக்காளி உள்ள பகுதியில் பூமிக்கு அடியில் குழி தோண்டி உணவருந்தாமல் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்து வருகிறேன்.
இந்த ஆண்டும் எனது தங்கைக்கு குழந்தை இல்லாததால் அவளுக்கு குழந்தை வரம் வேண்டி பூமிக்கு அடியில் படுத்து 21 நாள் விரதம் இருந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.