பாதயாத்திரை சென்ற பெண் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாதயாத்திரை சென்ற பெண் பலியானார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் குழுவாக சேர்ந்து மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். அப்போது தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சரஸ்வதி (வயது 45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.