அரசு பஸ் மோதி பாதயாத்திரை பக்தர் சாவு
ஆத்தூர் அருகே அரசு பஸ் மோதி பாதயாத்திரை பக்தர் இறந்தார்.
ஆறுமுகநேரி:
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 48). மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். கடந்த 3-ந் தேதி ஆத்தூர் அருகே உள்ள பழைய காயல் சிவன் கோவில் அருகே வடக்கிலிருந்து தெற்காக இடது புறமாக தனது நண்பர்கள் ராஜா, நாகமுத்து ஆகியோருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக முனீஸ்வரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் முனீஸ்வரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இவரது மகன் பாண்டீஸ்வரன் ஆத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.