தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்

ஜேடர்பாளையம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமானது.

Update: 2023-10-02 18:37 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 26 பேருக்கு தொகுப்பு வீடுகள் அரசால் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டது. இதில் ஒரு தொகுப்பு வீட்டில் கூலித்தொழிலாளி செல்லப்பன் (வயது 57), தனது மனைவி தமிழரசி (50) மற்றும் மகன், மருமகள் கைக்குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று மாலை அனைவரும் கூலி வேலைக்கு சென்று இருந்தனர். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்லப்பன் வீட்டின் உட்புறம் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் வைத்திருந்த டி.வி., மின்விசிறி, கட்டில், பீரோ, கியாஸ் அடுப்பு அனைத்தும் நொறுங்கி சேதமடைந்தன. வீட்டின் மேற்கூரை விழுந்தபோது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட 26 தொகுப்பு வீடுகள் அனைத்துமே பழுதாகி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பழுதடைந்த அனைத்து வீடுகளயும் செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மேற்கூரை இடிந்து விழுந்து பாதிப்புக்குள்ளாகி உள்ள கூலித்தொழிலாளி செல்லப்பனுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரண உதவி வழங்கி வீட்டை செப்பனிட்டு தர வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்