உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-11-21 18:52 GMT

சென்னை,

பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை நடந்த உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேராசிரியர்கள் தரப்பில், ஐகோர்ட்டு உத்தரவுக்குபின் பேராசிரியர்கள் பணிக்கு அனுமதிக்கப்படவில்லை. வருகைப்பதிவேடு கல்லூரிகளின் முதல்வர்கள் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பச்சையப்பன் அறக்கட்டளை தரப்பில், பேராசிரியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, 'உதவி பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரி முதல்வர்கள் விளக்க அறிக்கையும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்தால் அதையும் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்