பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ராவுத்தநல்லூர் மதுரா புதுப்பேட்டை பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் மதுரா புதுப்பேட்டை ஏரிக்கரை அருகே பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த கோவில் திருப்பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முன்னதாக காலை 8 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதல் கால யாக பூஜை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு 2-வது கால யாக பூஜை, வேதபாரயணம், சஹஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, 3-வது கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.