திற்பரப்பு பேரூராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திற்பரப்பு பேரூராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-28 18:04 GMT

குலசேகரம், 

திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பேரூராட்சித் தலைவர் பொன்.ரவி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பெத்ராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் ேபசும் போது, பேரூராட்சி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லையெனவும், திருநந்திக்கரையில் குலசேகரம், ஆற்றூர், திருவட்டார் ஆகிய பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்ககூடாது எனவும் கூறினர்.

உள்ளிருப்பு போராட்டம்

தொடர்ந்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா கவுன்சிலர்கள் அனிதா, ராஜகுமார், மணிகண்டன், செந்தில், சதீஷ், லட்சுமி, ராஜ்குமார் ஆகியோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேரூராட்சித் தலைவர் பொன்.ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேரூராட்சிப் பகுதியில் பிற பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்க நிர்வாகம் ஒருபோதும் சம்மதிக்காது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.

இதனை பா.ஜனதா கவுன்சிலர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேரடியாக வந்து இதுதொடர்பாக உத்தரவாதம் அளித்தால் தான் போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடியும் என்று கூறினர். இதையடுத்து போராட்டம் இரவு 7 மணியைக் கடந்து நீடித்தது. இந்த சம்பவத்தால் பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்