சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: கைது செய்யப்பட்ட 4 பேரிடம் மருத்துவக்குழுவினர் விசாரணை

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் கோர்ட்டு அனுமதியின் பேரில் மருத்துவக்குழுவினர் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

Update: 2022-07-04 20:58 GMT

ஈரோடு

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் கோர்ட்டு அனுமதியின் பேரில் மருத்துவக்குழுவினர் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

கருமுட்டை விற்பனை

சிறுமியிடம் கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை விற்பனை நடந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் போலீசார் மற்றும் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் தலைவர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக 16 வயது சிறுமியின் புகாரின் பேரில், அவருடைய தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி மற்றும் போலி ஆதார் அட்டை வழங்கிய ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவக்குழுவினர் விசாரணை

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில், சிறப்புக்குழு அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே புரோக்கர் மாலதியிடம் ஒரு நாள் விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் மருத்துவக்குழு தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஒருமனுதாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் விசாரணை நடத்த அனுமதிக்க கேட்டு இருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி, ஒரு நாள் விசாரணைக்கு அனுமதி அளித்தார். அதன்படி நேற்று விசாரணை நடத்த மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்தனர். நேற்று காலை டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஈரோடு கிளை சிறைக்கு வந்தனர். அங்கு அடைக்கப்பட்டு உள்ள ஜான் என்பவரை (போலி ஆதார் அட்டை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்) விசாரித்தனர்.

கோபி-கோவை

கருமுட்டை விற்பனை தொடர்பாக ஏற்கனவே மருத்துவக்குழுவினர் சேகரித்து வைத்து இருந்த சில தகவல்களை கேட்டு உறுதி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜான் அவருக்கு தெரிந்த விஷயங்களை அதிகாரிகள் குழுவிடம் கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து விசாரணையை முடித்துக்கொண்ட அதிகாரிகள் அங்கிருந்து நேரடியாக கோபி சென்றனர். அங்கு சிறுமியின் தாயாரின் 2-வது கணவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரிடமும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினார்கள். ஒரு நாள் மட்டுமே விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்து இருந்ததால், அவசர அவசரமாக அதிகாரிகள் கோவை புறப்பட்டு சென்றனர். அங்கு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறுமியின் தாயார் மற்றும் புரோக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் எந்தெந்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான விடை கிடைத்ததா? என்பது குறித்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்க உள்ளனர். இந்த அறிக்கை வெளிவந்தால், கருமுட்டை விற்பனை தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்