வாய்க்காலில் கவிழ்ந்த லாரி; சிமெண்டு மூட்டைகள் சிதறி கிடந்தன
வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததில் சிமெண்டு மூட்டைகள் சிதறி கிடந்தன.
கொள்ளிடம் டோல்கேட்:
டால்மியாபுரத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. வாத்தலை அருகே உள்ள சிலையாத்தி என்ற இடத்தில் திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையில் உள்ள திருப்பத்தில் டிரைவர் லாரியை திருப்ப முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள அய்யன் வாய்க்காலில் இறங்கி கவிழ்ந்தது. வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் லாரியின் டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகள் அனைத்தும் வாய்க்காலில் விழுந்து சிதறியது. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.