வேலூர் மாநகரராட்சி 3 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு எதிரொலியாக வேலூர் மாநகரராட்சி 3 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு எதிரொலியாக வேலூர் மாநகரராட்சி 3 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது.
முதல்-அமைச்சர் ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வேலூருக்கு கடந்த 1-ந் தேதி வருகை தந்தார். அப்போது அவர் களஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மறுநாள் காலையில் நகரில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலைஉணவு திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும் சத்துவாச்சாரி டபுள்ரோடு பாரதிநகரில் கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கட்டிடத்தின் அருகே சாலையோரம் குப்பைகள் கிடந்துள்ளது. இதைப்பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ''மாநகராட்சி அந்தஸ்து பெற்ற இப்பகுதியில் சாலையில் குப்பைகள் கிடக்கிறது. குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
அதன் எதிரொலியாக் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட பகுதி மற்றும் மற்றும் சுற்றியுள்ள வார்டுகளிலும் நேற்று மாநகராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது. இதற்கான பணியில் 180 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்தனர். பொக்லைன் எந்திரம் கொண்டும் செடி, கொடிகள் அகற்றப்பட்டது.
தூய்மைப்பணி
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் குப்பைகள் இல்லாத நிலையை உருவாக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஒருநாளைக்கு 3 வார்டுகள் வீதம் 5 நாட்களில் 15 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக 21, 22, 23 ஆகிய வார்டுகளில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் 3 வார்டுகள் வீதம் மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் தூய்மைபடுத்தப்பட உள்ளது. குப்பைகள் அகற்றுதல், கால்வாய் தூர்வாருதல், கால்வாய் மண் அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.