மார்கழி மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
மார்கழி மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
மார்கழி மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதப்பிறப்பு
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறந்து சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மார்கழி மாதப்பிறப்பு என்பதால் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
இதேபோல் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் மாதப்பிறப்பையொட்டி சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக கலசபூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், விநாயகர் யாகம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் குவிந்தனர்
இதற்கிடையே நேற்று மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதேபோல் தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் வருகையும் அதிகமாக இருந்தது. குறிப்பாக நடைதிறப்புக்கு முன்பே கோவில் வாசலில் பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில், படிப்பாதை மற்றும் தரிசன வழிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் மாத பிறப்பையொட்டி பழனி மலைக்கோவிலில் இரவு 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்க ரதத்தில் எழுந்தருளினார். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று தங்கரத புறப்பாடு நடந்தது. அப்போது வெளிப்பிரகாரத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி சாமியை வழிபட்டனர்.